TOP NEWS
Print

சாதனையாளர் தினம் - 2016

on . Posted in General

வடக்கு மாகாணக்கல்வித்திணைக்களத்தினால் நடாத்தப்படவுள்ள 'வடக்கு மாகாண சாதனையாளர் கௌரவிப்பு ' நிகழ்வு எதிர்வரும் 19, 20.11.2016 ஆம் திகதிகளில் மூன்று அமர்வுகளாக நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் இலங்கைவேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், முதலாம் நாள் (19.11.2016) காலை 9.00 மணிக்கு முதலாம் அமர்வு மாகாணக்கல்விப்பணிப்பாளர் திரு.செ.உதயகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பிரதம நீதியரசர் மாண்புமிகு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் கௌரவ உயர்திரு த.குருகுலராஜா அவர்களும், கலந்து கொள்ளவுள்ளனர்.

இம்முதலமர்வில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்கள், முதலமைச்சர் கிண்ண சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், கணிதப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், வணிகப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், சமூகவிஞ்ஞானப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் விவசாயம் மனைப்பொருளியல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் போன்றோருக்கான கௌரவிப்பு நடைபெறவுள்ளது.

அதே திகதியில் பி.ப 1.30 மணிக்கு இரண்டாம் அமர்வு ஆரம்பமாகவுள்ளது. மாகாணக்கல்விப் பணிப்பாளர் உயர்திரு செ.உதயகுமார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் உயர்திரு இ.இரவீந்திரன் அவர்களும், கௌரவ விருந்தினராக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மொழித்துறைத் தலைவர் கலாநிதி எஸ்.றமேஸ் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இவ் அமர்வில் மாகாண மட்ட ஆங்கில தினப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், அழகியல்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், கௌரவிப்பு வழங்கப்படும்.

இரண்டாம் நாள் 20.11.2016 அன்று காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள மூன்றாவது அமர்வில் வடக்கு மாகாணத்தில் சாதனைகள் புரிந்த பாடசாலைகளும், அவற்றின் அதிபர்களும், அச்சாதனைகளைப் புரிந்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்படவுள்ளனர். புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களையும் 70 புள்ளிகளுக்கு மேல் பெறவைத்த பாடசாலைகளின் அதிபர்களும், அவர்களைத் தரம் 5இல் கற்பித்த ஆசிரியர்களும், நூலகப்போட்டியில் மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களும், பாடசாலைகளின் வினைத்திறனாக சுகாதார வசதிகளைப் பயன்படுத்தும் பாடசாலைகளின் அதிபர்களும் பங்குபற்றல் வேண்டும்.

மாகாணக்கல்விப் பணிப்பாளர் உயர்திரு செ.உதயகுமார் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக  வடக்கு மாகாணசபைத் தலைவர் கௌரவ கந்தையா சிவஞானம் அவர்களும், கௌரவ விருந்தினராக பிரதிப்பிரதம செயலாளர் (நிதி) திரு. எஸ்.யூ.சந்திரகுமார் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

பரிசில்கள் பெறும் மாணவர்களும், கௌரவிப்புப் பெறவுள்ள பாடசாலைகளின் அதிபர்களும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களும் தத்தமக்குரிய அமர்வுகளின் ஆரம்ப நேரங்களுக்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக பிரசன்னமாகி தமது வரவுகளை பதிவு செய்து கொள்ளல் வேண்டும் என மாகாணக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.